சிறிலங்காவுக்கு எதிராக, சுதந்திரமான விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வலியுறுத்தும் தீர்மானம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேறுவது பெரும்பாலும் உறுதியாகிவிட்டதாக, நம்பிக்கை வெளியிட்டுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
நேற்று ஜெனிவாவில் அமெரிக்கா நடத்திய முறைசாரா – இணைக் கலந்துரையாடலை அடுத்து, கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
45 நாடுகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த சுமந்திரன், ஜெனிவா தீர்மான வரைவின் நிலை குறித்து கருத்து வெளியிடுகையில்,
“சிறிலங்காவுக்கு எதிராக, அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த தீர்மான வரைவு இப்போது திருத்தப்பட்டுள்ளது.
இந்த வரைவு, தொடர்பாக நாம் முன்வைத்த அனேகமான யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வரைவில் திருத்தமாக உட்செலுத்தப்பட்டுள்ளன. இதனை நாம் வரவேற்கின்றோம்.
இந்த வரைவின் திருத்தப்பட்ட வடிவம் குறித்து பகிரங்கக் கலந்தாய்வு இடம்பெற்றது.
நானும், கொழும்பில் இருந்து வந்திருந்த மனிதஉரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னாண்டோவும் அங்கு கருத்துகளை வெளியிட்டோம்.
இந்தக் கலந்தாய்வு எமக்கு மிகுந்த திருப்தியளிக்கிறது.
இங்கு, சிறிலங்காவுக்காக ஒரு சில நாடுகள் திரும்பத் திரும்ப குரல் எழுப்பிய போதிலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் பெரும்பாலான நாடுகள் இந்த திருத்த வடிவம் குறித்து முழு அளவில் திருப்தியடைந்திருக்கின்றன.
இனிமேலும் இந்த வரைவு பலம் பெறுமா, முன்னேற்றம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எனினும் தற்போதைய நிலையில், இந்த தீர்மான வரைவு வாக்கெடுப்புக்குச் சென்றாலும் கூட, எதிர்பார்த்த பெரும்பான்மையோடு அது நிறைவேறும் என்று முழுமையாக நம்புகிறோம்.
அனேகமான நாடுகள் பிரேரணையை ஆதரிக்கத் தீர்மானித்து விட்டன.
எனவே, சிறிலங்காவுக்கு எதிராக ஒரு அனைத்துலக சுதந்திர விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படும்.
அதற்கான தீர்மானம் உரிய பெரும்பான்மையுடன் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் “என்று தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment