வடகொரியா
கடந்த பெப்ரவரி மாதம் மூன்றாவது அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து
அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்தது.இதனால்
தென்கொரிய பகுதியில் அமெரிக்கா ஆயுதங்களை குவித்து வந்தது. இந்நிலையில்,
அமெரிக்க நாட்டை சேர்ந்த கென்னெத் பே என்பவரை கடந்த நவம்பர் மாதம்
வடகிழக்கு துறைமுக நகரான ரசோன்க்குள் நுழையும் போது வடகொரியா கைது செய்தது.
இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை கடந்த சனிக்கிழமை நடந்தது. அதில்
கென்னெத் பே வடகொரிய அரசுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டது
சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்தது.
ஆனால் கென்னெத் பே, கொரிய-அமெரிக்க சுற்றுலா ஏஜென்ட்டாக பணிபுரிந்து
வந்தார் என்றும் செல்லுபடியாகும் விசாவுடன் தான் வடகொரியா நாட்டுக்குள்
நுழைந்தார் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் துணை தகவல்
தொடர்பாளர் பேட்ரிக் வென்ட்ரெல் கூறுகையில், அமெரிக்க குடிமக்களின்
பாதுகாப்பே இந்த அமைச்சகத்துக்கு முக்கியம். கென்னெத் பேவை மனிதாபிமான
அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வடகொரியாவை
கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியிருந்தார்.
சமீபகாலமாக வடகொரியா பல அமெரிக்க குடிமக்களை பிடித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment