அந்தஇரவில்...ஐயோ, என்னைக்காப்பாற்றுங்கள்என்றுகதறியஇளம்பெண்...!
எமது ஊர் மிகச் சிறியதொரு கிராமம். இக்கிராமத்தில் பல்வேறு மசாஜ்
நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையங்களில் உடல் ஆரோக்கியத்துக்கான
அழுத்தம் நடைபெறுவதில்லை. மாறாக விபசாரமே நடத்தப்படுகிறது.
திங்களன்று ஒரு பெண்ணின் அவலக்குரல் கேட்டு ஊர் மக்கள் எல்லோரும்
ஓடிப்போய்ப் பார்த்தோம். அழகான இளம் பெண்ணொருத்தி அரை நிர்வாணக் கோலத்துடன்
மயங்கிப் போய்க் கிடந்தாள்.
இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார் அலஸ்
தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த மாதர் சங்கத்தின் முக்கியஸ்தர்
ஒருவர்.
திருகோணமலை நகருக்கு வடக்கே சுமார் இரண்டு கிலோ மீற்றர் தொலைவில்
நிலாவெளி பிரதான வீதியை தொட்டு நிற்கும் ஒரு சின்னக் கிராமந்தான்
அலஸ்தோட்டமென்னும் கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த ஊர்மக்கள் சிலர்
செவ்வாய்க்கிழமை காலை (23.04.2013) ஊடகவியலாளர் சிலருக்கு தொலைபேசி மூலம்
அவசர அழைப்பை விடுத்திருந்தனர். அழைப்புக்கள் கிடைத்த சில துளிகளில்
ஊடகவியலாளர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்தனர்.
அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர்
என ஒரு சின்ன சந்தியில் கூடி நின்றார்கள். பல பிரபல ஹோட்டல்கள்
இப்பகுதியில் உள்ளன என பொதுமக்கள் தெரிவித்தார்கள். விளம்பர பலகைகளையும்
பார்க்க முடிந்தது.
திங்கள் இரவு நடந்த சம்பவத்தை ஒவ்வொருவராக கூடி நின்றவர்கள் விவரிக்க முற்பட்டார்கள்.
‘இரவு 10.45 மணியிருக்கும் அயலவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் வேளை மாவ
பேர கண்ட (என்னைக் காப்பாற்றுங்கள்) என்னைக் காப்பாற்றுங்கள் என்ற ஒரு
பெண்ணின் அவலக்குரல் கேட்டது. ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று கூடினோம். குரல்
வந்த மசாஜ் நிலைய பக்கமாக ஓடி கேற்றைத் திறந்து கொண்டு உள் நுழைந்தோம்.
எமது ஆரவாரத்தைக் கேட்டோ என்னவோ உள்ளே நின்ற கறுத்த பஜிரோ வாகனமொன்று
திடீரென வெளி வந்து ஓடி விட்டது. உள்ளே நுழைந்தோம் நாம். அந்த நிலையத்தின்
உரிமையாளர் ஓடி விட்டார். ஒரு இளம் பெண் அந்த அறையில் உள்ளாடை மட்டும்
இருக்க அரை நிர்வாணமாக கிடந்தாள். பெற்சீற்றால் மூடி விட்டோம். அவள்
சுயநினைவற்ற நிலையிலேயே கிடந்தாள்.
மறு அறைக்குச் சென்றோம். அங்கு இரு இளம் பெண்கள் ஓடுவதற்கு தயாரான
நிலையில் உடுப்புக்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். ஊர் மக்கள் எல்லோரும்
சேர்ந்து உரிமையாளரை மடக்கிப் பிடித்தோம்.
இவ்வாறு நிகழ்ந்த சம்பவத்தை விபரித்தார் ஒருவர். அவர் தொடர்ந்து
விபரிக்கையில், மேற்படி சுயநினைவற்றுக் கிடந்த பெண் புத்தளம் முந்தலைச்
சேர்ந்தவர் என்றும், ஏனைய இருவரும் கொழும்பை அண்டிய பிரதேசத்தைச்
சேர்ந்தவர்கள். அவரை நாம் விசாரணை செய்தபோது, நான் ஒரு பெண் இரு
பிள்ளைகளின் தாயென்றும், கவர்ச்சியான சம்பளம் கிடைக்குமென நம்பி வந்து
ஏமாந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
மயக்க நிலையில் கிடந்த பெண்ணுக்கு நாங்கள் அவசரம், அவசரமாக முதல்
சிகிச்சை வழங்கினோம். பெண்கள் எல்லோருமாகச் சேர்ந்து அலங்கோல நிலையில்
கிடந்த பெண்ணின் ஆடைகளைச் சீர் செய்தனர். இந்தக் கொடுமை இன்று நேற்றல்ல
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்து விட்டது என்று சொல்லப்படுகிற
காலத்திலிருந்தே தொடர்ச்சியாக இந்த கேவலம் நடந்து கொண்டிருக்கிறது.
இதுபற்றி பொலிஸ் பிரதேச சபை தவிசாளர், ஏனைய அதிகாரிகள் பலருக்கும்
பலமுறை அறிவித்தும் எவ்வித பயனுமில்லையெனத் தெரிவித்தார் மாதர் சங்க
முக்கியஸ்தர்.
119 தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உப்புவெளி பொலிஸாருடன் சரியாக இரவு
11.09க்கு தொடர்பு கொண்டோம். அவர்கள் 12.30க்குப் பிறகே வருகை தந்தார்கள்.
(தூரம் 1 1/2 கி.மீ) விடயத்தை விளக்கினோம். மயக்க நிலையில் இருந்த பெண்ணை
தமது ஜீப் வண்டியில் ஏற்றினார்கள். ஏனைய இரண்டு பெண்களையும் விசாரணை செய்த
பின் வண்டியில் ஏற்றினார்கள்.
நாங்கள் மடக்கிப் பிடித்திருந்த
நிலைய உரிமையாளரையும் இன்னுமொருவரையும் அதே வண்டியில் ஏற்றிக்கொண்டு
பொலிஸார் சென்று விட்டனர் என விளக்கம் தந்தார் இன்னுமொரு இளைஞர்.
வடகிழக்கைப் பொறுத்தவரை கலாச்சார சீரழிவுகளைக் கொண்டு வருவதற்காக
பாலியல் சந்தை வியாபாரத்தை முக்கிய ஒரு கருவியாகவும் செயல் திட்டமாகவும்
மேற்கொள்ளப்படுகிறது. 2009ஆம் ஆண்டுகளுக்குப் பின்னரே இவை மலிவடைந்து
வருவதை காண முடிந்துள்ளது.
கந்தபுராணக் கலாசாரம் செழித்தோங்கி, வளர்ந்த யாழ். மண்ணில் அந்த
அடையாளங்களை இல்லாது ஒழிப்பதற்காக அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும்
பல்வேறு பிரயத்தனங்கள் எந்த திசையிலிருந்து திட்டமிடப்படுகின்றது என்பதும்,
உலகம் அறியும். பனையோலையும், பாடுமீனும் அடையாளமிட்டுக் காட்டப்படும்
பண்பாடு கொண்ட மண்ணின் மாண்புகளைக் கெடுக்கும், அழித்து விடும் ஊடுருவல்,
கலாசாரத்தைக் கொண்டுவர மேற்கொள்ளப்பட்டு வரும் சதித்தனமான வேலைத்திட்டம்
பலவற்றில் ஒன்றுதான் இந்த பாலியல்சந்தை வியாபாரமாகும்.
அப்பாவித்தனம் கொண்ட கிராமங்களுக்குள் நீலப்படம் என்றும், இணையத்
தளங்கள் என்றும், கையடக்க காட்சிகள் என்றும், விரவிக் கொண்டிருக்கும்
நிலையில் பாலியல் வியாபாரச் சந்தைகளை உடல் ஆரோக்கிய பிடிப்பு நிலையமென்ற
அனுமதிப் பத்திரங்களுடன் மேற்கொண்டு வரும் பல்வேறு நிலையங்கள் நாட்டின் பல
இடங்களிலும் உள்ளன.
கோணேஷர் கலாசாரத்தின் பின்னணியில் வளர்ந்துகொண்ட கிராமங்கள் திருகோணமலைப் பிரதேசத்தில் அநேகம் உண்டு என்பது சொல்லப்படவேண்டிய உண்மை.
திருகோணமலைப் பிரதேசத்தில் சர்வதேச வியாபாரம், வியாபித்திருந்த
போர்த்துக்கீசர் காலம் அதன் பின்னே, ஒல்லாந்தர் காலம், மறுகாலமான
பிரித்தானியர் காலம் என்ற எல்லா வகைக் காலத்திலும், வணிக போக்குவரத்துக்
காரணமாக பெருந்தொகை கப்பல்களின் வருகை, மாலுமிகளின் உள்வருகை போன்றவை இந்த
நகரத்தின் வாழ்க்கை முறைகள் பல சவால்களுக்கு ஆளாக்கப்பட்ட போதும்,
தனித்தன்மை குலையாது பேணப்பட்டிருக்கிறது.
1983ஆம் ஆண்டுக்கு முன் உலகமயமாக்கலின் அறிமுக கால கட்டத்தில்
திருகோணமலை நகரமும், அதன் அண்மிய கடற்கரைக் கிராமங்களான உப்புவெளி,
நிலாவெளி, திரியாய், இறக்ககண்டி, புல்மோட்டை, சல்லி என்ற கிராமங்கள்
அனைத்தும் உல்லாச விடுதிகள் மலிந்து போய் சர்வ உலகத்திலும் இருந்து வந்த
உல்லாசப் பறவைகளினால் சீரழிந்து போய்க்கிடந்த கலாச்சார பெறுமதிகள் பற்றி
அன்றைய காலப்பகுதியில் சுட்டிக் காட்டப்பட்டு வந்திருக்கிறது.
உண்மையைச் சொல்லப்போனால் அந்நிய நாணயங்களைப் பெற வேண்டுமென்ற பொருளாதார
நோக்கோடு, உப்புவெளி, அலஸ்தோட்டம், நித்தியபுரி, நிலாவெளி, 6ஆம் கட்டை என்ற
கிராமங்களில் கொட்டில் வீடுகள் அமைத்து, இரண்டு மூன்று மெத்தைக்
கட்டில்களைப் போட்டு, உல்லாச விடுதிகளாக்கிய நிலையும் அன்று இருந்துள்ளது.
இக்காலப்பகுதியில்
பாலியல் சந்தையென்ற வகையில் சிறுவர் துஷ்பிரயோகம் களிக்கூத்து மையங்கள்
அன்று பல இயங்கி வந்த நிலையில் திருகோணமலைப் பிரதேசத்தின் தனித்தன்மைக்கு
கேடுகள் பலநேர்ந்தனவென அக்கால முதியோர் பாடம்பாடமாக சொல்வதுண்டு. பிழையோ
சரியோ தெரியவில்லை. 1983ஆம் ஆண்டு யுத்த வெடிப்புக்கள் காரணமாக உல்லாசப்
பறவைகளின் வருகை தடைப்பட்டது. மலிந்து போய்க்கிடந்த விடுதிகளுக்கு மூடு
விழா கொண்டாடப்பட்டது.
பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதை
போல் 2009ஆம் ஆண்டுக்குப்பின் மீண்டும் மலிந்து வரும் இந்த சமூகக்
கெடுமானங்களை ஜீரணிக்க முடியாத நிலையில் தான் அலஸ்தோட்ட கிராம மக்கள்
இவ்வாறு கிளர்ந்தெழுந்தார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஒரு மூதாட்டி எங்களிடம் ஓடி வந்து அழுதார் தம்பி இந்த கேடு கெட்ட
பிழைப்பை உடைய அந்த நிலையங்கள் (மசாஜ் நிலையம்) எங்கள் கிராமத்துக்கு
வேண்டாம். என்னுடைய பேரக்குழந்தைகள் இந்த கிராமத்தில் நல்லவர்களாக காலம்
காலமாக வாழ வேண்டும். சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம் கொண்டு
வரப்படுகிறார்கள் என மனம் விட்டு அழுதார் அந்தப்பாட்டி நாம் செய்வதறியாது
திகைத்து நின்றோம்.
280 குடும்பங்களைக் கொண்ட தனித்தமிழ்க் கிராமம் இந்த
அலஸ்தோட்டக்கிராமம். இங்கு வாழ்கின்றவர்களில் பெரும்பாலானோர்
கூலித்தொழிலையும் கடல் தொழிலையும் தமது வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள்.
இக்கடற்கரை ஒரு அழகு கொழிக்கும் அமைதியான கடல் பிராந்தியம். கடல்படு
திரவியங்களாக சங்கு, முத்து, விதவிதமான வண்ணம் வண்ணமான சிற்பிகள், மீன்கள்
கொட்டிக்கிடக்கும் வெண்மணற் பரப்புக்கொண்ட இப்பிரதேசத்தில் பல நட்சத்திர
ஹோட்டல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பலருக்கு தொழில் வாய்ப்பும் உப
தொழிலும் இந்த ஹோட்டல்களால் கிடைக்கிறது. இதன் காரணமாக நல்ல வருமானத்தையும்
ஒரு சிலர் பெற்று வருகிறார்கள் என்று அவர்கள் கூறினார்கள்.
அண்மையில் விபசாரத் தொழில் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில்
இரு உடல் பிடிப்பு நிலையத்தவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் 5
இலட்சத்துக்கு மேற்பட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டது. அப்படி இருந்தும்
மீண்டும் அவர்கள் அத்தொழிலை செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த
பாலியல் கெடுதிகள் பற்றி படத்துடன் கூடிய முறைப்பாட்டை உப்புவெளி பிரதேச
சபை தவிசாளரிடம் ஒப்படைத்திருந்தோம். அவர் இது பற்றி எந்த அக்கறையும்
எடுக்கவில்லை. பலமுறை மக்களாகிய நாங்கள் சென்று விசாரித்தோம். அவர் எந்த
நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. நாங்கள் கொடுத்த போட்டோக்கள் இன்னும்
அவருடைய மேசையில் தூங்கிக் கொண்டிருக்கிறதென கூட்டத்திலிருந்த ஒருவர்
ஆவேசமாக கூறினார்.
அவ்வேளையில் உப்புவெளி பிரதேச சபையின் உதவி தவிசாளர் இரா. நிஷாந்தன்
இச்சம்பவங்களை அறிந்து உடன் வந்திருந்தார். அவரிடம் ஊடகவியலாளர் பல
சந்தேகங்களை எழுப்பினார்.
தவிசாளர் அவசர வேலை காரணமாக சென்று விட்டதாகவும் அவரை
பிரதிநிதித்துவப்படுத்த தான் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவர் இப்பகுதியில் பல நட்சத்திர அந்தஸ்தையுடைய பல பிரபல்யமான
ஹோட்டல்களும் அதற்குள் உடல் ஆரோக்கியத்துக்கான அழுத்த நிலையங்களும்
இருக்கின்ற போது பிரதேச சபை ஏன் அதற்கு மேலதிகமாக இத்தகைய நிலையங்களுக்கு
அனுமதி வழங்கியுள்ளது என்று கேட்டார்.
மேற்படி நிலையங்களுக்கான அனுமதியை சுற்றுலாத்துறை சபையே வழங்கி
வருகிறது. நாங்கள் வழங்குவதில்லை. பிரதேச சபை வியாபார உரிமம் வரியை மட்டுமே
அறவிடுகின்றது. பதிவு செய்கின்றது. அவ்வாறு இவ்வகை நிலையங்களை நாம் பிரதேச
சபையில் பதிவு செய்கின்ற போது நிலையத்தை நடாத்துவதற்குரிய மருத்துவ
சான்றிதழ் பிரதேச செயலகத்தின் வியாபாரபதிவு உரிமையாளர் யார் என்ற
அத்தாட்சிப்பத்திரம் வாடகைக்கு விடப்பட்டிருந்தால் வீட்டு உரிமையாளரின்
ஒப்புதல் பத்திரம் ஆகியவற்றுடன் தான் மசாஜ் நிலையங்களை நடாத்த அனுமதி
வழங்குகின்றோம். அது மாத்திரமின்றி சமூகத்தின் ஒற்றுமை அல்லது
அனுமதியுடனேயே இவ்வகை நிலையங்களை நடாத்த அனுமதி வழங்கப்படுகின்றது. இவ்வகை
நிலையங்களுக்கு வரியீட்டாளரின் மதிப்பீட்டின் படி மிக குறைந்தளவு தொகையே
வரியாக அறவிடுகிறோமென நிஷாந்தன் தெரிவித்தார்.
அவ்விடத்தின் நிலையை வந்திருந்த சமாதான முறைமையாளர் கிராம உத்தியோகத்தரை
பிரதிநிதித்துவப்படுத்திய ஒருவரிடம் விசாரித்த போது அவர் கூறினார்.
மூன்றாம் கட்டை (உப்பு வெளிச்சந்தி) சந்தியிலிருந்து அலஸ்தோட்டம்
வரையிலுள்ள 100 மீற்றர் எல்லைக்குள் சுமார் 32 பெரிய ஹோட்டல்கள் இயங்கி
வருகின்றன.
இவற்றுக்குள் அநேகமானவற்றில் அரச அங்கீகாரம் பெற்ற ஆரோக்கியத்துக்கான அழுத்த நிலையங்கள் இயங்கி வருகின்றன.
இவற்றை விளம்பரத்துவதற்கென்ற பாலியல் வன்மங்களை தூண்டுகின்ற படங்களுடன்
கூடிய விளம்பரப் பலகைகள் போடப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான பாடசாலை
மாணவர்கள் போய் வருகின்ற போது இத்தகைய வன்ம காட்சிகளை பார்த்தே செல்ல
வேண்டியுள்ளது.
ஹோட்டல் ஒன்றின் வாசலில் வைக்கப்பட்டிருக்கின்ற
மதுக்கடையில் குடித்து விட்டு எரிகின்ற துண்டு சிகரெட்டுக்களை பாடசாலை
மாணவர் உட்பட சிறிய சிறிய பிள்ளைகள் எடுத்துக்குடிக்கும் நிலை
பெற்றோர்களாகிய எங்களுக்கு வயிறு பற்றியெரியும் நிலையை உண்டாக்குகிறது என
கூட்டத்திலிருந்த ஒருவர் கூறினார்.
இவற்றின் கூட்டு மொத்த விளைவுகளை எல்லோரும் ஒத்த குரலில் கூறினார்கள்.
எங்கள் பெண் பிள்ளைகளை பண்புடன் வளர்க்க முடியாமல் உள்ளது. பாடசாலை
மாணவர்கள் வழிதெருவால் போய் வர முடியாமல் உள்ளது. குடும்ப பெண்கள் இரவு
பட்டால் பயந்து பயந்தே போய் வர வேண்டியுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம்
மலிந்து விடுமோ பாலியல் வன்மங்கள் கூடிவிடுமோ என்று அச்சம் கொள்கின்றோம்.
மிக அண்மையில் வாசனா என்ற பெண் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள்.
நாம் பொலிசாரையும் உப்புவெளி பிரதேச சபை தவிசாளரையும் அரசாங்கத்தையும்
கேட்பதெல்லாம் உடல் ஆரோக்கியத்துக்கான அழுத்த நிலையம் என்ற பெயரில்
விபச்சாரம் நடாத்தும் இத்தகைய நிலையங்களை எமது கிராமத்திலிருந்து
ஒழித்துத்தாருங்கள் எங்கள் கிராமத்தை நல்ல கிராமமாக இருக்க விடுங்கள் என்று
கேட்கிறோமென ஒத்த குரலில் வேண்டினார்கள்.
அவ்வேளை பார்த்து ஜீப் வண்டியில் ஒரு பொலிஸ் அதிகாரி உட்பட பல பொலிசார்
சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வந்திருந்தார்கள். ஒரு பொதுமகன் ஓடி வந்து
சொன்னார் நாசமாக போக, இரவு கைது செய்த ஐவரையும் விடுதலை செய்து
விட்டார்களாம் என்று. - திருகோணமலை நகர் நிருபர்
0 Comments:
Post a Comment