கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணைய உலகம் இதுவரை
சந்தித்திராத மிகப் பெரிய தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக நாம்
உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம்.
இத்தாக்குதலை நடத்தியவர் என நம்பப்படும் செவன் கம்பூயுஸ் என்ற
சந்தேகநபர் ஸ்பானிய பொலிஸாரால் பார்சலோனாவில் வைத்து நேற்று முன் தினம்
கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கம்பூயுஸ் அப்பாவியெனவும் அவரை விடுதலை செய்யாவிடின்
மனிதர்கள் இதுவரை கண்டிராத பெரும் இணையத்தாக்குதல் நடத்தப்படுமென
ஹெக்கர்களின் குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என அஞ்சப்படுகின்றது. செவன் கம்பூயுஸ் என்ற நபரே சைபர் பங்கரின் உரிமையாளரும், முகாமையாளரும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அவரைக்
கைது செய்யும் போது அவரிடமிருந்த கணனிகள், வன் தட்டுக்கள் மற்றும்
கையடக்கத்தொலைபேசிகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கம்பூயஸை ஸ்பானிய பொலிஸார் மீண்டும் நெதர்லாந்து நாட்டுக்கு அனுப்பிவைக்கவுள்ளனர். இவரின் தாக்குதலால் அண்மையில் உலகின் பல பகுதிகளில் இணையத்தின் வேகம் வெகுவாகக் குறைந்தன. தேவையற்ற மின்னஞ்சல்களை 'Spam' தடுக்கும் நிறுவனமான Spamhausக்கும் ,
அத்தகைய மின்னஞ்சல்களை அனுப்புவதாக குற்றஞ்சாட்டப்படும் Cyberbunker க்கும்
இடையேயே இடம்பெற்றுவரும் மோதலே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டது. Cyberbunker நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட DDOS- Denial of Service
attack எனப்படும் ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ அவை வழங்கும் சேவையை
பயனாளிகள் பெறமுடியாத வகையில் முடக்க மேற்கொள்ளப்படும் சேவை மறுப்புத்
தாக்குதலே வேகம் குறைந்தமைக்கான காரணமெனவும் இது இணையத்தின் 'DNS Domain
Name System' என்று பரவலாக அறியப்படும் களப் பெயர் முறைமையை
பாதிக்கத்தொடங்கியுள்ளதாகவும் தொழில்நுட்ப வல்லுனர்கள்
விளக்கமளித்திருந்தனர். இந்நிலையில் கம்பூயுஸ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் Spamhaus மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. எனினும் தாக்குதல் நடத்தப்போவதாக ஹெக்கர்கள் எச்சரித்துள்ளமையானது இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
0 Comments:
Post a Comment