பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் சட்டவிரோத ரகசிய நடவடிக்கை ஒன்றுக்காக மட்டக்களப்பு காரைத்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள அதிரடிப்படை முகாமில் இருந்து நேற்றிரவு 11.45 அளவில் குழுவொன்று வெளியில் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குழுவில் அதிரடிப்படை சாரதி ஒருவருடன் 3 அதிரடிப்படையினர், கருணாவுடன் தொடர்புடைய மூன்று முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் உட்பட 6 அடங்குகின்றனர். இவர்கள் அனுராதபுரத்தில் உள்ள பிம்பரத்வௌ நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள், இரண்டு ரி 56 ரக துப்பாக்கிகள், அதிரடிப்படையினர் பயன்படுத்தும் எம்.16 ரகத்தை சேர்ந்த மூன்று துப்பாக்கிகள், ஒரு கைதுப்பாக்கி, இரண்டு கைக்குண்டுகள், ஒரு மெட்டரோலா தொடர்பு சாதன கருவி ஆகியவற்றை தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். சீருடைகளை எடுத்து கொண்டு, சிவில் உடையில் இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
காரைத்தீவு அதிரடிப்படை முகாமில் கருணாவுடன் தொடர்புடைய 7 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் ரகசியமான முறையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அதிரடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட சிப்பாய்கள் அல்ல. சட்டத்திற்கு விரோதமான கொலைகளுக்கு மாத்திரம் இவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அதிரடிப்படை காவற்துறை மா அதிபரின் கீழ் இயங்கினாலும் காவற்துறை மா அதிபரே, ஏனைய உயர் அதிகாரிகளே இந்த ரகசிய நடவடிக்கை குறித்து எதனையும் அறிந்திருக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சில் கீழ், ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றி வரும் அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியும் பாதுகாப்பு அமைச்சின் இணைப்பு செயலாளராக பணியாற்றி வரும் கே.எம்.சீ. சரத்சந்திர, இந்த குழுயுவுக்கான கட்டளைகளை பிறப்பித்து வருகிறார்.
இந்த குழுவினர் முகாமில் எந்த ஆவணங்களிலும் பதிவுசெய்யாமல் சென்றுள்ளமையானது கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக பாதுகாப்பு பிரிவினர் ஏதேனும் பணிகளுக்கு செல்லும் போது, பணிகள் தொடர்பான குறிப்பேட்டில் பதிவு செய்வது வழக்கம். அத்துடன் நாளாந்த அறிக்கை குறிப்பேட்டிலும் பதிவுசெய்ய வேண்டும். எனினும் பதிவுகளை செய்யாது, ஆயுதங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இவர்கள் எவரையாவது கடத்திச் செல்லவோ அல்லது கொலை செய்யவோ புறப்பட்டுச் சென்றிருக்கலாம் என முகாமின் ஏனைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே காவற்துறை தலைமையகத்திற்கு தெரியாமல், பாதுகாப்பு அமைச்சு ரசியமான பாதாள உலக நடவடிக்கைகளுக்காக அதிரடிப்படையினரை பயன்படுத்தி, வருவதுடன் சட்டவிரோதமான இந்த நடவடிக்கைக்கு நேரடியான கட்டளைகளை பிறப்பித்து வருகிறது எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment