காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் MH370 விமானத்தின் இணை விமானி பாரிக் அப்துல் ஹமீத் உயிருடன் திரும்பிவருவார் என அவரது காதலி நதீரா ரம்லி நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த 7ம் திகதி 239 நபருடன் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சீனாவின் பீஜிங் நோக்கி சென்ற விமானம் நடுவானில் மாயமாகி போனது.
இந்த விமானத்தை தலைமை விமானி அஹமத் ஷாவும், இணை விமானி பாரிக் அப்துல் ஹமீத்தும் ஓட்டிச் சென்றனர்.
விமானத்திலிருந்து மலேசிய கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகளுடன் இறுதியாக உரையாடிய நபர் இணை விமானி பாரிக் அப்துல் ஹமீத் என நம்பப்படுகிறது.
இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கிடைக்கப்பெறாத நிலையில், உறவினர்களும் நண்பர்களும், விமானத்தில் பயணித்தவர்கள் நிச்சயம் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் துணை விமானியின் காதலி நதீரா ரம்லி மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார்.
இவரும், துணை விமானி பாரிக்கும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர், நதீராவும் ஒரு விமானியாவார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்தனர், இந்நிலையில் விமானம் மாயமானது தொடர்பில் பல்வேறு கட்டுக்கதைகள் உலா வருவதால் நதீரா உட்பட அவரது பெற்றோரும் மிகுந்த கவலையில் உள்ளதாக மலேசிய பத்திரிக்கைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
துயரத்தில் வாடும் நதீரா தற்போது பாரிக் அப்துல் ஹமீத்தின் வீட்டில் தங்கியுள்ளார் என்றும், அப்துல்லின் தாயாருக்கு உறுதுணையாக உள்ளார் எனவும் நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.



0 Comments:
Post a Comment