அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் மீது விமானத்தை மோதியது போன்று மலேசிய விமானத்தைக் கடத்தி ஏதாவது ஒரு இந்திய நகரம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம் என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு கடந்த 8-ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமாய் மறைந்தது. அந்த விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது.
ஆனால் ரேடாரில் இருந்து மறைந்த பிறகு 7 மணி நேரத்துக்கும் அதிகமாக அந்த விமானம் பறந்திருப்பது செயற்கைக்கோளில் பதிவாகியுள்ளது.
எனினும் விமானம் எங்கு பறந்தது என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. அநேகமாக அந்தமான் கடல் பகுதி அல்லது கஜகஸ்தான் எல்லையில் விமானம் பறந்திருக்கலாம் என்று புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் போயிங் விமானத்தை நன்கு கையாளத் தெரிந்தவர்களே விமானத்தை திட்டமிட்டு கடத்தியிருக்கலாம் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அமெரிக்க அதிகாரி அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன் நிர்வாகத்தில் வெளியுறவுத் துறை துணைச் செயலாளராகப் பணியாற்றிய ஸ்டோரப் தபோத் என்பவர் ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
“மலேசிய விமானம் பறந்த திசை, அதன் எரிபொருள் கொள்ளளவு, அதிக தொலைவுக்குப் பறக்கும் திறன் ஆகியவற்றைக் கணக்கிடும்போது சில விஷயங்கள் நெருடுகின்றன.
அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களை அல்-காய்தா தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தது போன்று இந்தியாவின் ஏதாவது ஒரு நகரம் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியாகி பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்திய வான் எல்லைக்குள் அந்நிய விமானங்கள் அத்துமீறி நுழைய முடியாது என்று விமானப் படை மூத்த அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மலேசிய விமானத்தைக் கடத்தி ஏதாவது ஒரு இந்திய நகரம் மீது தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு வாய்ப்பு இல்லை என இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய விமானப் படை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:
அமெரிக்காவில் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு விமானம் பறந்தபோது உலக வர்த்தக மையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மலேசிய விமானத்தைப் பொறுத்தவரை இந்திய எல்லைக்குள் நுழைய வாய்ப்பில்லை.
நாட்டின் வடகிழக்கு, மேற்கு பிராந்திய வான் பகுதிகள் 24 மணி நேரமும் சக்திவாய்ந்த ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. ஏதாவது ஒரு விமானம் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் எங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் அந்த விமானத்தை சுட்டுவீழ்த்திவிடுவோம். இவ்வாறு தெரிவித்தனர்.
விமானப்படை முன்னாள் தளபதி ஏர்சீப் மார்ஷல் பி.வி.நாயக் கூறியபோது, இந்திய எல்லைக்குள் அந்நிய விமானங்கள் நுழைய முடியாது என்று தெரிவித்தார்.
மேற்கு பிராந்திய விமானப் படை கமாண்டர் ஏ.கே. சிங் கூறியபோது, மலேசிய விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்ததாகக் கூறப்படுகிறது. அவ்வளவு உயரத்தில் இருந்து கட்டிடங்கள் மீது மோத முடியாது. இந்திய எல்லைக்குள் வேறு எந்த விமானமும் ஊடுருவ முடியாது. ஒருவேளை ரேடார் கண்காணிப்பு குறைவாக உள்ள பூடான், நேபாளம், திபெத் வழியாக அந்த விமானம் பறந்து சென்றிருக்கலாம் என்று தெரிவித்தார்.
மற்றொரு மூத்த அதிகாரி கூறியபோது, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை ரேடார்களின் கண்களில் இருந்து எந்த விமானமும் தப்பிக்க முடியும். ஆனால் இந்திய ராணுவ ரேடார்களின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. இந்திய விமானப்படை சார்பில் நாடு முழுவதும் ரேடார்கள் நிறுவப்பட்டுள்ளன. போயிங் 700 ரக விமானம் மிகப் பெரியது. அந்த விமானம் ராணுவ ரேடாரில் இருந்து தப்பியிருக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment